இன்றைய அவசர உலகமயமாக்கலில், தவறான வாழ்வியல் முறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை முடி உதிர்தல் ஆகும். இதற்காக சந்தையில் கிடைக்கும் ரசாயனம் கலந்த பல்வேறு எண்ணெய்களையும் ஷாம்புகளையும் பயன்படுத்தி ஏமாறுபவர்களுக்கு, இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிக்கும் ஒரு எண்ணெய் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. அதுதான் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பூசணி விதை எண்ணெய்.
பூசணி விதைகளில் துத்தநாகம் , மெக்னீசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்-ஈ போன்ற கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தாராளமாக நிறைந்துள்ளன. இவை தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, முடி கொட்டுவதை உடனடியாகத் தடுப்பதுடன், புதிய முடிகள் வேகமாக வளரவும் பெரிதும் துணைபுரிகின்றன. இந்த எண்ணெய்யை நாம் எந்தவித ரசாயனமும் இன்றி மிக எளிதாக வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்த முடியும்.
முதலில் தேவையான அளவு பூசணி விதைகளை எடுத்து, நன்றாகக் கழுவி காயவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அந்த விதைகளை ஒரு மிக்ஸியில் போட்டு லேசான பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை ஊற்றி, அதில் அரைத்து வைத்துள்ள பூசணி விதை பொடியைச் சேர்க்க வேண்டும். இந்த கலவையை ‘டபுள் பாய்லிங்’ முறையில், அதாவது கொதிக்கும் நீரின் மீது மற்றொரு பாத்திரத்தை வைத்து மிதமான சூட்டில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் ஆறியதும் அதனை ஒரு மெல்லிய துணியால் வடிகட்டி எடுத்துக்கொண்டால், சத்துக்கள் நிறைந்த பூசணி விதை எண்ணெய் தயார்! தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெய்யை வாரத்திற்கு 2 முதல் 3 முறை தலைமுடியின் வேர்க்கால்களில் படுமாறு நன்றாகத் தேய்த்து, லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
எண்ணெய்யைத் தேய்த்த பிறகு, குறைந்தது 1 மணி நேரம் கழித்து மிதமான ஷாம்பு கொண்டு தலையை அலசலாம். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது, ஒரே வாரத்தில் முடி உதிர்வது கணிசமாகக் குறைந்து, கூந்தல் அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் மாறுவதை நீங்களே கண்கூடக் காணலாம்.
