ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் தருணங்கள் நெருங்கிவிட்டன. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்திற்காக இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் இடையே நடக்கும் அனல் பறக்கும் மோதலும், குத்துச்சண்டை காலிறுதியில் இந்தியாவின் ஜதுமணி சிங் மந்தேங்பாம், பாகிஸ்தானின் சுமாமா ரெஹ்மானை எதிர்கொள்வதும் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளன.

இந்த உச்சக்கட்டப் போட்டிகளுக்கு நடுவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் போட்டி முடிந்ததும் ஒருவருக்கொருவர் கைகுலுக்குவார்களா அல்லது கிரிக்கெட்டைப் போல முற்றிலும் புறக்கணிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் விவாதமும் சூடுபிடித்துள்ளன.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அரங்கேறிய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விளையாட்டு மற்றும் இருதரப்பு உறவுகள் வரலாற்றிலேயே மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளன. இதன் காரணமாகத்தான், டி20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட சமீபத்திய கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய அணி தொடர்ந்து மறுத்து வருகிறது. அனைத்து வயதுப் பிரிவுகளிலும் இந்த முறை மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளிலும் கிரிக்கெட்டைப் போன்றே இந்த அதிரடித் தடை தொடருமா என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டைப் போல பிசிசிஐ போன்ற ஒற்றைக் கட்டுப்பாட்டு அமைப்பு காமன்வெல்த் போட்டிகளுக்கு கிடையாது என்பதால், இங்கு நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் ஒவ்வொரு விளையாட்டும் தனித்தனி தேசிய விளையாட்டுச் சங்கங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. வெளிவந்த தகவல்களின்படி, பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவது மற்றும் நட்பு பாராட்டுவது போன்ற விஷயங்களை அந்தந்தத் தனிப்பட்ட வீரர்களின் சொந்த விருப்பத்திற்கே விளையாட்டுச் சங்கங்கள் விட்டுவிட்டன. எடுத்துக்காட்டாக, லான் பவுல்ஸ்  விளையாட்டு அதிகாரிகள் தங்கள் நாட்டு வீரர்களிடம், பாகிஸ்தான் எதிரிகளுடன் கைகுலுக்குவதிலோ, கைகளைத் தட்டி மகிழ்ச்சியைப் பகிர்வதிலோ அல்லது நலம் விசாரிப்பதிலோ எந்தத் தவறும் இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.

இருப்பினும், இந்தச் சுமுகமான சூழலிலும் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இல்லை. களத்தில் விளையாட்டு நாகரிகத்தின் அடிப்படையில் சாதாரணமான வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ள அனுமதி இருந்தாலும், பாகிஸ்தான் வீரர்களிடமிருந்து எந்தவிதமான பரிசுகளையோ அல்லது நினைவுப் பரிசுகளையோ பெற்றுக்கொள்வதற்கு  பங்கேற்கும் அணைத்து  வீரர்களுக்கும் கண்டிப்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் பிசிசிஐ இதுபோன்ற பழக்கங்களை முற்றிலும் தவிர்த்தாலும், ஜூனியர் ஆக்கி போட்டிகள் மற்றும் பார்வையற்றோருக்கான மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை போன்ற பல்வேறு தொடர்களில் இரு நாட்டு வீரர்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி, கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய காமன்வெல்த் களத்தில் நம் நாட்டு வீரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.