அரசு விழாக்களிலும் கல்வி நிறுவனங்களிலும் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்கி, மீறினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்தச் சட்ட மசோதாவிற்கு நாட்டின் குடியரசுத் தலைவர் எவ்வித ஒப்புதலும் அளிக்கக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய விவரங்கள் தேசியப் பொதுவாழ்வு அவமரியாதை தடுப்புச் சட்டம் (திருத்தம்) மசோதா, 2026 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற கொள்கைக்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் எதிரான நேரடித் தாக்குதலாகும். அரசியல் நிர்ணய சபை வேண்டுமென்றே தடுத்த முடிவுகளை, தற்போது 76 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டம் மூலம் திணிக்க மத்திய அரசு முயல்கிறது.

கடந்த 1937-ஆம் ஆண்டிலேயே மகாத்மா காந்தி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெருந்தலைவர்கள், வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பொதுநிகழ்வுகளுக்குப் பொருத்தமானவை என்றும், மற்ற சரணங்களில் உள்ள வழிபாட்டுக் கூறுகளை அனைவர்மீதும் திணிப்பது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றும் திட்டவட்டமாக முடிவு செய்திருந்தனர்.

அதனாலேயே தாகூரின் ‘ஜன கண மன’ தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேசிய கீதத்தையே கட்டாயப்படுத்த முடியாது என்றும், அதனைப் பாடாவிட்டாலும் உரிய மரியாதை செலுத்தி எழுந்து நின்றால் குற்றமாகாது என்றும் உச்சநீதிமன்றம் ‘பிஜ் இமானுவேல்’ வழக்கில் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், தேசியப் பாடலைக் குற்றவியல் சட்டம் மூலம் கட்டாயமாக்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நோக்கத்தையே கேலிக்குள்ளாக்குவதாகும்.

தமிழ்நாடும் கேரளமும் வரலாற்று ரீதியாகவே வந்தே மாதரம் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து வந்துள்ளன. மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் மரியாதை என்பது சட்டத்தின் மூலம் கத்தியைக் காட்டித் திணிக்கப்பட முடியாது; அது மக்களின் மனங்களில் தானாக உருவாக வேண்டும்.

“>

 

அரசியல் லாபத்திற்காக நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் இத்தகைய பிரிவினைவாத முயற்சிகளை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.