இயற்கையின் படைப்பில் மனித மனங்களைக் கட்டிப்போடும் அதிசயங்களுக்கு என்றுமே பஞ்சமிருப்பதில்லை. குறிப்பாக, பனிமூடிய இமயமலையின் உயர்ந்த சிகரங்கள் தங்களுக்குள் எண்ணற்ற அற்புதங்களை ஒளித்து வைத்துள்ளன.

அதில் ஒன்றுதான், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில், உறைபனிச் சூழலில் அரிதாகப் பூக்கும் ‘கெஞ்சோ’ என்றழைக்கப்படும் அபூர்வ மலராகும். உள்ளூர் மக்களால் ‘படம்ச்சல்’ என்றும், இதன் அரிய தன்மையால் ‘இமயமலை வைரம்’என்றும் அழைக்கப்படும் இந்த மலர், மனிதர்களை விட உயரமாகவும், கிட்டத்தட்ட இரண்டு மீட்டருக்கும் மேல் வளரும் விசித்திரமான ஆற்றல் கொண்டது.

7 முதல் 15 ஆண்டுகள் வரை காத்து கிடந்து, தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்தத் தாவரத்தின் அழகிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, உலகம் முழுவதிலும் உள்ள இயற்கை ஆர்வலர்களையும் நெட்டிசன்களையும் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடும் பனிப்புயல், ஆபத்தான புறஊதா கதிர்கள் மற்றும் ஆக்சிஜன் அளவு 40 சதவீதம் வரை குறைந்து காணப்படும் உறைபனிப் பகுதிகளில் கூட இந்த மலர் எவ்வாறு உயிர் வாழ்கிறது என்பதுதான் அறிவியல் உலகையே வியப்பில் ஆழ்த்தும் விஷயமாகும்.

பாறைகள் நிறைந்த மலைச்சரிவுகளிலும் பனிப்பாறைகளுக்கிடையிலும் வளரும் இந்தத் தாவரம், தன்னைச் சுற்றி ஒரு பசுமை இல்லம் போன்ற நுண் சூழலைத் தானே உருவாக்கி உறைபனியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது.

சாதாரணப் பூக்களைப் போல வண்ணமயமாக இல்லாமல், வைரம் போல ஜொலிக்கும் இந்த மலரைப் பார்ப்பதே இமயமலைக்குச் செல்லும் மலையேற்ற வீரர்களுக்கும் (Trekkers) வழிகாட்டிகளுக்கும் பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது. உத்தராகண்டின் ‘மலர்களின் பள்ளத்தாக்கு’ (Valley of Flowers), ஹெம்குண்ட் சாஹிப் மற்றும் சிக்கிம் போன்ற உயரமான மலைப் பகுதிகளில் இந்த அரிதான இயற்கை அதிசயத்தைக் காண முடிவது இயற்கை நமக்குக் அளித்த வரப்பிரசாதமாகும்.

வெறும் அழகுக்காக மட்டுமன்றி, பாரம்பரிய மருத்துவத்திலும் இந்த ‘கெஞ்சோ’ மலருக்கு மிக முக்கியமான இடம் உண்டு. பல நூற்றாண்டுகளாக இமயமலைப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் நாட்டு மருத்துவர்கள், பல்வேறு உடல் உபாதைகளுக்கான இயற்கை மருந்தாக இந்தத் தாவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும், பருவநிலை மாற்றம் மற்றும் மனிதர்களின் அத்துமீறல்களால் இதுபோன்ற அரிய வகை இமயமலைத் தாவரங்கள் அழியும் அபாயத்தைச் சந்தித்து வருகின்றன. அதனால், மலையேற்றத்தின் போது இத்தகைய இயற்கை அதிசயங்களைக் காண்பவர்கள் அவற்றைப் பறிக்காமல், சேதப்படுத்தாமல் தூரத்திலிருந்து ரசித்து பாதுகாப்பதே இமயமலையின் சூழலியலையும், இந்த ‘இமயமலை வைரத்தையும்’ எதிர்கால தலைமுறைக்காகத் தக்கவைக்க உதவும் ஒரே வழியாகும்.