தமிழகத்தில் டாஸ்மாக் போக்குவரத்துத் துறையில் அரங்கேறி வரும் முறைகேடுகள் மற்றும் முறையற்ற டெண்டர் விதிகள் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளதாகப் போக்குவரத்துத் தொழில் நடத்துவோர் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களிலும் ட்விட்டரிலும் (X) பரவி அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

பாதிக்கப்பட்ட டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் தரப்பிலிருந்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, கடந்த பல ஆண்டுகளாகச் சீராக நடந்து வந்த தொழிலில் தற்போது திடீர் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டரில் பங்கேற்க முடியாதவாறு 100-க்கும் மேற்பட்ட லாரிகள், கோடிக்கணக்கில் டெண்டர் வைப்புத் தொகை, மற்றும் பாதுகாப்புத் தொகை போன்ற கடுமையான வரம்புகள் விதிக்கப்பட்டு சிறிய மற்றும் நடுத்தர வணிகர்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

கோடிக்கணக்கில் கட்சி நிதி வழங்கிய நபர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் தாரைவார்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக இத்தொழிலை நம்பியிருந்த சுமார் 350 குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டதாகவும் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கும் முறையிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கண்டனப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

“>

 

ஊழலும் அடாவடித்தனமும் எங்கு நடந்தாலும் மக்கள் இதற்கான தகுந்த பதிலடியை வழங்குவார்கள் என்று இணையத்தில் பரவி வரும் பதிவுகள் ஆளுங்கட்சிக்கு எதிராகக் கடுமையான விவாதங்களைக் கிளப்பியுள்ளன.