பணியிடங்களில் சில குறிப்பிட்ட நபர்களுடன் மீட்டிங் என்றாலே பலருக்கும் ஒருவித இனம் புரியாத பயமும், நெஞ்சு படபடப்பும் ஏற்படுவது வழக்கம். அந்த மீட்டிங் எப்போது முடியும், அது ரத்தாகக் கூடாதா என்று மனதிற்குள் நினைப்பவர்கள் பலர் உண்டு. இதனை வெறும் உணர்வாகக் கடந்து போகாமல், தொழில்நுட்ப ரீதியாக நிரூபித்துக் காட்டியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர். தனது உடலில் ஏற்படும் இதயத் துடிப்பு மற்றும் மன அழுத்தத்தின் அளவைக் துல்லியமாகக் கணக்கிடும் ‘ஹூப்’ எனப்படும் உடல்தகுதி கண்காணிப்பு வளையத்தைப் பயன்படுத்தி, தனக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சக ஊழியர்கள் யார் யார் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இந்தத் தகவல், சமூக வலைதளங்களில் தற்பொழுது நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. வேலை செய்யும் இடத்தில் மேலாளர்கள் அல்லது சக ஊழியர்களின் அழைப்புகள் வரும்போது, தனது இதயத் துடிப்பு எவ்வாறு எகிறுகிறது என்பதைத் தரவுகளுடன் அவர் நிரூபித்துள்ளார். இந்த சுவாரசியமான பரிசோதனை, கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் அன்றாட மன அழுத்தத்தை மிகவும் எதார்த்தமாகவும், அதே சமயம் தொழில்நுட்பக் கண்ணோட்டத்திலும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
