கூகுள் நிறுவனம் தனது கூகுள் டிரைவ் செயலியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஆவண ஸ்கேனர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீண்ட ஆவணங்கள், ரசீதுகள், ஒப்பந்தங்கள் மற்றும் கையெழுத்துக் குறிப்புகள் உள்ளிட்டவற்றை மொபைல் போனிலேயே எளிதாக டிஜிட்டல் வடிவமாக மாற்றும் வகையில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பல பக்கங்களை ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்து, அவற்றை தானாகவே ஒரே கோப்பாக இணைக்க முடியும். மேலும், தெளிவற்ற அல்லது மங்கலாகப் பதிவான பக்கங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு மாற்றாகச் சிறந்த தரத்தில் உள்ள பக்கங்களை இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் தானாகவே தேர்வு செய்து வழங்கும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
தவறுதலாக ஒரே பக்கம் மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டால், அதனைத் தானாகவே கண்டறிந்து நீக்கும் வசதியும் இதில் உள்ளது. இந்த அனைத்து ஏ.ஐ. அம்சங்களும் இணைய இணைப்பு இல்லாமலேயே மொபைல் சாதனத்திலேயே நேரடியாகச் செயல்படுவதால், தனிப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வடிவமைப்புடன், ஆவணங்களை நிர்வகிக்கும் பயனர் இடைமுகமும் மிகவும் கவர்ச்சிகரமாகவும் எளிதாகவும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது குறைந்தபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு இந்த வசதிபடிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு பயனுள்ள மேம்படுத்தலாக இது அமையும்.
