எல்லையற்ற இருள் சூழ்ந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் எண்ணற்ற மர்மங்கள் நிறைந்துள்ளன. அதில் மிக முக்கியமானது ‘நியூட்ரினோ’ எனப்படும் அடிப்படைத் துகள் ஆகும்.

ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இருக்கும் இந்தத் துகள்கள் ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியவை. சூரியன், விண்மீன்கள் மற்றும் அணுக்கரு உலைகளில் இருந்து வெளிப்படும் இந்த நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆனால், இந்தத் துகள்களுக்கு மின்சுமை இல்லாததால்,இவற்றை மின்சார அல்லது காந்தசக்தியைப் பயன்படுத்திச் சிறைபிடிக்க முடிவதில்லை. ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் பூமியையும், நமது உடலையும் கூட எந்த அணுவுடனும் மோதாமல் ஊடுருவிச் செல்கின்றன.

விண்வெளியில் பயணம் செய்யும்போது சட்டென ஒரு வகையில் இருந்து மற்றொரு வகையாகத் தங்களை மாற்றிக்கொள்ளும் விசித்திரமான செயல்பாட்டைக் கொண்டுள்ளதால், விஞ்ஞானிகள் இதனை ‘பேய் துகள்’ என்று அழைக்கின்றனர். இத்தகைய நியூட்ரினோக்கள் அபூர்வமாக பூமியில் உள்ள அணுக்களுடன் மோதும் போது, அந்த மோதலைப் பதிவு செய்து ஆய்வு செய்வதற்காகச் சீனாவின் ஒரு பகுதியில் நிலத்தடியில் சுமார் 700 மீட்டர் ஆழத்தில் பிரம்மாண்ட ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அங்கு தொடங்கப்பட்ட ஆய்வுப்பணியின் மிக முக்கியமான தரவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. நியூட்ரினோக்களின் வகை மாறுபாடுகள் குறித்து இதுவரை இல்லாத அளவிற்குத் துல்லியமான தகவல்கள் இதில் கிடைத்திருப்பதாகவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு வகை நியூட்ரினோவுக்கும் தனித்தனி எடை இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இனிவரும் காலங்களில் அவற்றின் எடை குறித்த துல்லியமான ஆய்வுகளை நடத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த பல ரகசியங்களை உடைக்க இந்த ஆய்வு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.