ஆன்லைன் மூலமாகப் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் ஊழியர்களின் அத்துமீறல்களும் ஆங்காங்கே வெளிவந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், வீட்டுக்குள் வர அனுமதி மறுத்த இளம்பெண்ணின் கதவை விடாமல் தட்டி, அச்சுறுத்தல் ஏற்படுத்திய ‘ஜெப்டோ’ நிறுவன டெலிவரி ஊழியரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியாக இருந்த அந்தப் பெண் தன் கைபேசியில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, ஆன்லைன் டெலிவரி தளங்களின் பாதுகாப்பு குறித்த பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் செயலி மூலம் ஆர்டர் செய்திருந்த நிலையில், அதனை டெலிவரி செய்ய வந்த ஊழியர் வீட்டின் உட்பகுதிக்கு வர முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு காரண கருதி அந்தப் பெண் அவரை வீட்டிற்குள் வர அனுமதிக்காமல், வாசலிலேயே பொருளை வைத்துவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த டெலிவரி ஊழியர், உடனடியாக வெளியேறாமல் வீட்டின் கதவை சடசடவென பலமாகத் தட்டி, வீட்டிற்குள் நுழைய முற்பட்டு அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார். வெளியே நின்ற நபர் தொடர்ந்து கதவைத் தட்டி அத்துமீறியதால் பயந்துபோன அந்தப் பெண், கதவைப் பூட்டியபடியே அந்த பயங்கரமான தருணத்தைப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தனியாக இருக்கும் பெண்களுக்கு ஆன்லைன் டெலிவரிகளால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்ட இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் காவல்துறை உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்த ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.