சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த அஷ்ரப் நிஷா (69) மற்றும் அவரது இளைய மகனும் பல் மருத்துவருமான அஷ்ரப் அஹமது (42) ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உள்ளே  இந்த இருவரும் ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ந்து போன நிலையில், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போது, அவர்களின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியதில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குடும்பச் சொத்துக்களைப் பிரிப்பதில் நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மூத்த மற்றும் இரண்டாவது மகன்களான அஷ்ஷார் அகமது மற்றும் அப்ரார் அகமது ஆகியோர் இணைந்து சொத்துக்காகத் தாயையும் தம்பியையும் அடித்துத் கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவரும் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்துவிட்டு, இருவரும் தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியதும் தெரியவந்ததையடுத்து, போலீசார் அவர்களைக் கைது செய்து மேலும் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.