ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஆத்மகூர் மண்டலத்தில் உள்ள பம்பனூர் சுப்பிரமணியேஸ்வர சுவாமி கோயிலில், பார்ப்போரை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. இக்கோயிலில் சமீபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அதிகாரிகளால் நடைபெற்றது. அப்போது உண்டியலில் இருந்த சில்லறை மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு 20 ரூபாய் நோட்டில் எழுதப்பட்டிருந்த வாசகம் ஒட்டுமொத்த அதிகாரிகளையும் அங்கிருந்த பக்தர்களையும் உன்னிடத்தில் உறைந்துபோக வைத்துள்ளது.
அந்த 20 ரூபாய் நோட்டில் பெண் பக்தர் ஒருவர், “என்னால் என் மாமியாரின் கொடுமைகளைத் தாங்க முடியவில்லை சாமி; அவதிப்படும் எனக்கு விடிவுகாலம் பிறக்க, அவதி கொடுக்கும் என் மாமியார் சீக்கிரம் இறந்துபோகும்படி பார்த்துக் கொள்ளுங்கள் சாமி” என்று தெலுங்கில் தனது மனவேதனையை உருக்கமாக எழுதியுள்ளார். பொதுவாகப் பக்தர்கள் தங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும், குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் பேப்பரில் எழுதி உண்டியலில் போடுவார்கள்.

ஆனால், இந்த மருமகள் நேரடியாகக் கரன்சி நோட்டிலேயே தனது மாமியாருக்கு மரணம் வேண்டி எழுதியுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசித்திரமான வேண்டுதல் கடிதம் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், “இக்காலக் குடும்பங்களில் நிலவும் கடுமையான மன அழுத்தத்தையும், மாமியார்-மருமகள் சண்டையையும் இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது” என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
