மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நகரின் கண்டுபாடா பகுதியில் உள்ள ‘ஃபேமஸ் ஷவர்மா’ (Famous Shawarma) என்ற உணவகத்தில் சிக்கன் ஷவர்மா, பீட்சா மற்றும் ஃபலூடா ஆகியவற்றை வாங்கிச் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட மொத்தம் 37 பேருக்குக் கடுமையான உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு இந்த உணவுகளைச் சாப்பிட்ட 14 பேருக்கு முதலில் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு, உடனடியாக அவர்கள் அங்குள்ளமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலையில் மேலும் 23 பேருக்கு இதே போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மாதவி பந்தாரே தற்போதைய கோடை வெப்பத்தைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் வெளி உணவுகள் மற்றும் பழைய உணவுகளைத் தவிர்த்து, வீட்டு உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினர் அந்த உணவகத்தில் அதிரடி சோதனை நடத்தி, ஆய்வுக்காக உணவு மாதிரிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில், உணவக உரிமையாளர் தில்ஷாத் அன்சாரி மீது சாந்திநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், இது குறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மூத்த காவல் ஆய்வாளர் விநாயக் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.