பல்லபி மல்லிக் என்ற பெண் தனது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அவர் இரயிலில் பயணித்தபோது, சக பயணி ஒருவருடன் உரையாடியுள்ளார். அப்போது அந்த நபர், தான் புதிதாக வாங்கிய வீடு, அதற்கான பெரும் இஎம்ஐ (EMI) தொகை மற்றும் இந்த ஆண்டு தனது பெற்றோரை புனித யாத்திரை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது எனத் தனது எதிர்காலக் கனவுகள் மற்றும் திட்டங்கள் குறித்து மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சொந்த ஊரில் உள்ள பெற்றோரைச் சந்திக்கச் செல்லும் உற்சாகத்துடன் அவரது பயணம் தொடர்ந்துள்ளது.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவரது மொபைல் ஃபோனுக்கு வந்த ஒரு நோட்டிபிகேஷன் ஒட்டுமொத்த சூழ்நிலையையும் தலைகீழாக மாற்றியது. அதைப்பார்த்து அந்த நபரின் முகம் வெளுத்துப் போனதால், பல்லபி மல்லிக் “எல்லாம் நலம்தானா?” என்று விசாரித்துள்ளார். அதற்கு அந்த நபர், “என் வேலை போய்விட்டது என்று நினைக்கிறேன்” எனக் கண்ணீருடன் கூறியுள்ளார். அவருக்கு வந்தது கார்ப்பரேட் நிறுவனத்தின் பணிநீக்க மின்னஞ்சல் ஆகும்.

வீடு, இஎம்ஐ, குடும்பப் பொறுப்புகள் என அனைத்தும் அப்படியே இருக்க, வருமானம் தரும் வேலை மட்டும் ஒரே நிமிடத்தில் பறிபோனது. சில நிமிடங்களுக்கு முன்பு யாரைப் பார்க்க ஆசையாகச் சென்றாரோ, அதே பெற்றோரை எதிர்கொள்ள அவர் பயப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்த கார்ப்பரேட் உலகின் கொடூரமான மற்றும் கணிக்க முடியாத தன்மையைக் குறித்தும், அவசர காலத்திற்கான நிதிச் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்தும் இணையவாசிகள் பலரும் இப்பதிவின் கீழ் தங்களது வருத்தங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.