மும்பை புறநகர் இரயிலில் பெண் ஒருவர் ஆடவர் ஒருவரால் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சக பயணிகள் பலரின் முன்னிலையிலேயே இந்த வன்முறை நிகழ்ந்தபோதிலும், தாக்குதலைத் தடுத்து நிறுத்தவோ அல்லது அப்ப பெண்ணுக்கு உதவி செய்யவோ யாருமே முன்வரவில்லை என்பது மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

இரயிலின் உள்ளே சக பயணிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பெண் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான காட்சி சமூக வலைத்தளங்களில் காணொளியாக வெளியாகிப் பெரும் அதிர்வலைகளையும், மக்கள் மத்தியில் கடுமையான கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

பொதுப்போக்குவரத்து சாதனமான மும்பை உள்ளூர் இரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். அத்தகைய மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு சூழலில், ஒரு பெண் கொடூரமாகத் தாக்கப்படும்போது சுற்றியிருந்தவர்கள் வெறும் வேடிக்கையாளராக மட்டுமே நின்று வேடிக்கை பார்த்தது மனிதநேயத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது.

ஆபத்தான சூழலில் இருக்கும் ஒருவருக்கு உடனடியாக உதவ முன்வராவிட்டாலும், அநீதியைத் தட்டிக்கேட்கும் குறைந்தபட்ச துணிச்சல்கூட மக்களிடம் இல்லாமல் போனது சமூகப் பாதுகாப்பின்மை குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட நபரைக் கண்டறிந்து கைது செய்ய இரயில்வே காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பொதுவெளியில் நிகழும்போது சமுதாயத்தின் இந்த மெளனமும் அலட்சியமும் குற்றவாளிகளுக்கு மேலும் துணிச்சலையே தருகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறை மற்றும் இரயில்வே நிர்வாகம் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதே வேளையில், ஆபத்தான தருணங்களில் சக மனிதருக்கு உதவ முன்வரும் சமூகப் பொறுப்புணர்வும் மக்களிடையே வளர வேண்டும்.

இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்குச் சட்டத்தின் முன் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பொது இடங்ளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலுவான பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

“>