மத்தியப் பிரதேச மாநிலம் மொரினா மாவட்ட அரசு மருத்துவமனையில், நோயாளி ஒருவரை அங்குப் பணிபுரிந்த செவிலியர் ஒருவர்  கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அரசு சுகாதாரத் துறையின் மீது கடும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இந்த வீடியோ இணையத்தில் பரவத் தொடங்கியது.

அதாவது குளுக்கோஸ் பாட்டிலை கழற்றுவது தொடர்பாக, நோயாளி மற்றும் அவரது உறவினர்களுக்கும், அங்கிருந்த செவிலியருக்கும் இடையே ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் கட்டுப்பாட்டை இழந்த செவிலியர், நோயாளியைக் கன்னத்தில் அறைந்து, கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

 

அதுமட்டுமின்றி, கையில் இருந்த குளுக்கோஸ் பாட்டிலை நோயாளி மீது தூக்கி எறிந்து தாக்கிய அந்த செவிலியர், “நீங்கள் ஏன் அரசு மருத்துவமனைக்கு வருகிறீர்கள்? சிகிச்சைக்கு வேண்டுமென்றால் தனியார் மருத்துவமனைக்குச் செல்லுங்கள்” என்று ஆவேசமாகக் கத்தியுள்ளார். அங்கிருந்த உறவினர் ஒருவர் இந்த அநாகரிகமான செயலைத் தனது மொபைல் ஃபோனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை மட்டுமின்றி மரியாதையான நடத்தையும்தான் முக்கியம் என்று பொதுமக்கள் கொதித்தெழுந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட செவிலியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.