மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தின் புரானி சாவனி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சாஹத் கான் (8) என்ற சிறுமி அண்டை வீட்டுத் தம்பதியரால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தந்தை சல்மான் கான் அளித்த புகாரின்படி, பக்கத்து வீட்டில் வசிக்கும் அமீன் கான் மற்றும் அவனது மனைவி ரேஷ்மா கான் ஆகியோர், சிறுமி சாஹத் கான் மீது திருட்டுப் பழியைச் சுமத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில், சிறுமியைத் தங்கள் வீட்டிற்குள் இழுத்துச் சென்று, அவளது கை, கால்களைக் கட்டிப்போட்டு, ஒயரால் (Wire) கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். பின்னர், காயமடைந்த சிறுமியை அவளது வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

மறுநாள் காலை, பெற்றோர் சிறுமியை எழுப்ப முயன்றபோது அவள் ஏற்கனவே உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சிறுமியின் உடற்கூறாய்வு  அறிக்கையில், கொடூரமான தாக்குதலால் சிறுமியின் மூளையில் ஏற்பட்ட பலத்த அதிர்ச்சி காரணமாகவே அவள் உயிரிழந்தாள் என்பது உறுதியானது. இந்த அறிக்கையின் அடிப்படையில் போலீசார் அமீன் கான் மற்றும் ரேஷ்மா கான் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு சிறுமி மீது திருட்டுப் பழி சுமத்தி, அவளைக் மிருகத்தனமாகக் அடித்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.