சமூக வலைத்தளமான லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி (HR) மற்றும் வேலை தேடும் இளைஞர் ஒருவருக்கு இடையே வாட்ஸ்அப்பில் நடைபெற்ற உரையாடலின் ஸ்கிரீன்ஷாட் வெளியாகி, நாட்டின் வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அபிஷேக் என்ற தொழில்நுட்ப வல்லுநர் பகிர்ந்துள்ள இந்த பதிவில், பெங்களூரு போன்ற பெருநகரத்தில் ஒரு மாத வேலைக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பது சந்தை தரநிலையின்படி மிகவும் குறைவு என்றும், இந்த தொகையை வைத்துக்கொண்டு அங்கு வாழ்க்கை நடத்துவது கடினம் என்றும் வேலை தேடும் இளைஞர் ஒருவர் பணிவுடன் கூறி அந்த வேலை வாய்ப்பை நிராகரித்துள்ளார்
. இதற்குப் பதிலளித்த நிறுவனத்தின் பயிற்சிப் பணியாளர் “பரவாயில்லை, ஆனால் எங்ளிடம் 12 ஆயிரம் ரூபாயில் பெங்களூருவில் வாழ்க்கை நடத்தும் ஊழியர்களும் உள்ளனர்” என்று கூறியது இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வாட்ஸ்அப் உரையாடல் வெளியானதைத் தொடர்ந்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களின் குடும்பச் சூழ்நிலையைப் பயன்படுத்திச் சுரண்டலில் ஈடுபடுவதாக நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஐடி நகரமான பெங்களூருவில் ஒரு தனிநபர் தங்குவதற்கான பிஜி (PG) அல்லது அறை வாடகையே 8 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை வரும் நிலையில், 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவது அநியாயம் என்று நெட்டிசன்கள் சாடியுள்ளனர். மேலும், “12 ஆயிரம் ரூபாய்க்குப் பெங்களூருவில் கார்ப்பரேட் ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியாது, வீட்டு வேலை செய்பவர்களை தான் எடுக்க முடியும்” என்றும், நிறுவனங்கள் சம்பளம் கொடுப்பதை ஊழியர்களுக்குச் செய்யும் பெரும் உதவியைப் போல நினைப்பதாகவும் பயனர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் பெங்களூரு போன்ற நகரத்தில் ஒரு நபர் வாழ்வதற்கு குறைந்தபட்சம் 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் தேவை என்ற நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் இத்தகைய சுரண்டல் போக்கு சமூக வலைத்தளங்களில் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.
