மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள உந்த்ரி – என்.ஐ.பி.எம். சாலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் பெரும் விபத்து ஒன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.

சாலையின் நடுவே இருந்த சாம்பர் மூடி மாயமானதால், அதன் வழியே சென்ற மூதாட்டி ஒருவர் எதிர்பாராதவிதமாகத் திறந்தவெளி சாம்பருக்குள் தவறி விழுந்தார்.

அதிர்ஷ்டவசமாக அவர் முழுமையாக உள்ளே சென்று சிக்கிக்கொள்ளாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நகரின் சாலைகளைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டுச் செலவிடப்பட்டாலும், சாலைகளின் தரம் மோசமான நிலையிலேயே தொடர்வது மாநகராட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

மூதாட்டி முழுமையாக உள்ளே விழுந்திருந்தால் மாபெரும் சோகம் அரங்கேறியிருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள பொதுமக்கள், நிர்வாகத்தின் அலட்சியத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

“>

 

ஆபத்தை விளைவிக்கும் திறந்தவெளி சாம்பர்கள் மற்றும் பழுதான பள்ளங்களை உடனடியாகச் சீரமைக்கவில்லை என்றால், மாநகராட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் குதிப்போம் எனப் பொதுமக்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.