சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் 8 வயது சிறுமி மற்றும் 11 வயது மகன் தங்களது தந்தையுடன் வசித்து வருகின்றனர். இதற்கிடையே, தாயார் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வருவதால், அவ்வப்போது குழந்தைகளை அங்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

இந்த சூழலில், கடந்த ஜூலை 30-ம்தேதி தந்தை தன் மகளுடன் சேர்ந்து தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கண்டுள்ளார். அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘குட் டச், பேட் டச்’ தொடர்பான விழிப்புணர்வு காட்சிகளைப் பார்த்த சிறுமிக்கு, கடந்த காலத்தில் தாய் வேலை செய்த வீட்டில் தனக்கு நேர்ந்த துயர சம்பவம் நினைவுக்கு வந்துள்ளது.

படம் முடிந்து வீடு திரும்பியதும், தன் தந்தையிடம் கண்ணீருடன் நடந்த உண்மையை அந்த சிறுமி போட்டுடைத்துள்ளார். தாயார் வேலை செய்யும் வீட்டிற்குச் சென்றபோது அங்குள்ள பெரியன் என்பவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் கூறியதைக் கேட்டு தந்தை கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, சிறுமியிடம் அத்துமீறிய பெரியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைச் சட்டத்தின் முன் நிறுத்தி அதிரடியாகக் கைது செய்தனர்.

திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கான சாட்சியாக இந்தச் சம்பவம் மாறியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தனது படங்களில் இதுபோன்ற சமூகப் பிரச்சினைகளையும் விழிப்புணர்வு கருத்துக்களையும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தற்போது ‘ஜனநாயகன்’ படம் ஒரு பிஞ்சு குழந்தையின் துயரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு, குற்றவாளியைக் கூண்டில் ஏற்றவும் உதவியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பதை பெற்றோருக்கும் சமூகத்திற்கும் உரக்கச் சொல்லியுள்ளது.