உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தின் பபேரு பகுதியில், புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி 14 வயது சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த போலித் தாந்தீரிகர் நிரஞ்சன் தாஸ் (என்ற) நீரஜ் மஹராஜ் என்பவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த பிப்ரவரி 2026-ல் கிராமத்திற்கு வந்த இந்த போலிச் சாமியார், விவசாயி ஒருவரின் நிலத்தில் புதையல் இருப்பதாகக் கூறி, அதை எடுக்க மந்திரக் கயிறு கட்ட வேண்டும் என நம்ப வைத்துள்ளார். மூடநம்பிக்கையின் காரணமாக அந்த விவசாயி தனது 14 வயது மகளைச் சாமியாரின் குடிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுமியின் கண்ணில் மை தடவி, மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டு, அவளைச் சாமியார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
யாரிடமாவது கூறினால் குடும்பமே அழிந்துவிடும் என மிரட்டியதால் அச்சமடைந்த சிறுமி யாரிடமும் கூறாத நிலையில், தந்தை அவளைத் தொடர்ந்து சாமியாரிடம் அழைத்துச் சென்றுள்ளார். ஜூன் 12 அன்று சிறுமியின் வயிறு பெரிதானதைக் கண்டு விசாரித்தபோது, அவள் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தந்தையின் புகாரின் பேரில், போலீசார்வழக்குப் பதிவு செய்து சாமியாரைக் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
