ஐக்கிய நாடுகள் சபை (UN) தலைமையகத்தில் போர்  காலங்களில் நிகழும் பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினக் கூட்டத்தில், இஸ்ரேல் தூதர் டேனி டேனன் மற்றும் ஐநா மூத்த அதிகாரி பிரமிளா பேட்டன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் பகுதிகளில் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதாக இஸ்ரேலை முதல்முறையாகப் பட்டியலிட்டு பிரமிளா பேட்டன் அறிக்கை தயாரித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல் தூதர் டேனி டேனன், ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸின் இஸ்ரேல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்குப் பணிந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, பிரமிளா பேட்டனை உடனடியாகப் பதவி விலகும்படி வலியுறுத்தினார்.

இந்த காரசாரமான விவாதத்தின் போது, ஆயுதமேந்திய மோதல்களில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஐநா சிறப்புப் பிரதிநிதி வெனேசா பிரேசியர் குறுக்கிட்டு, இஸ்ரேல் தூதரின் பேச்சு தனிப்பட்ட தாக்குதலாக உள்ளது என்றும், தங்களது அறிக்கை சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலானது என்றும் ‘பாயிண்ட் ஆஃப் ஆர்டர்’ எழுப்பினார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த தூதர் டேனி டேனன், “நாங்கள் ஐநாவின் உறுப்பு நாடு, நீங்கள் ஐநா ஊழியர்; அதனால் நீங்கள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்கள்” என்று வெனேசா பிரேசியரை நோக்கி ஆவேசமாகக் கத்தினார்.

மேலும் அவரது அறிக்கையை ‘அவமானகரமானது’ என்றும் சாடினார். இந்த இரண்டு அறிக்கைகளிலும் இஸ்ரேலுடன் சேர்த்து ஹமாஸ் அமைப்பும் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐநா பொதுச்செயலாளருடனான அனைத்து அதிகாரப்பூர்வ உறவுகளையும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே துண்டித்துள்ள நிலையில், இச்சம்பவம் ஐநா மன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.