இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவர், ஜப்பானியர்களின் பாரம்பரிய சூப் உணவான நூடுல்ஸ்-ஐ ஸ்பூன், போர்க் அல்லது சாப்பிஸ்டிக்ஸ் (Chopsticks) போன்ற எந்தவொரு கரண்டிகளையும் பயன்படுத்தாமல், தனது வெறும் கைகளால் அள்ளிச் சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘@Basedgoymemes’ என்ற எக்ஸ் (X) பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்த நபர் சூடான ராமேன் நூடுல்ஸை கைகளால் அள்ளி வாயில் வைக்கும்போது, சூடு தாங்க முடியாமல் முகம் சுளிப்பதும், கைகளை இறுக மூடிக்கொண்டு அசௌகரியமாக உணர்வதும் தெளிவாகத் தெரிகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த பழைய வீடியோ தற்பொழுது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
An Indian tourist in Japan was spotted eating hot ramen with his bare hands pic.twitter.com/0FwoxOqwkA
— Memes (@Basedgoymemes) June 19, 2026
இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் கலாச்சார நெறிமுறைகள் மற்றும் சுகாதாரம் குறித்த காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. ஜப்பானிய உணவு கலாச்சாரத்தை அறிந்த நெட்டிசன்கள் பலரும், “உங்களுக்குச் சாப்பிஸ்டிக்ஸ் பயன்படுத்தத் தெரியாவிட்டால் ஸ்பூன் அல்லது போர்க் பயன்படுத்தி இருக்கலாம், வெறும் கைகளால் சூடான சாப்பிடுவது அநாகரிகமானது.
ஜப்பானிய உணவு முறையை அவமதிக்க வேண்டாம்” என்றும், “ஜப்பானில் சுகாதாரம் மிக முக்கியம், கைகளால் சாப்பிட்டுவிட்டு மேஜை, கதவு போன்ற இடங்களில் கிருமிகளைப் பரப்ப வேண்டாம்” என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேநேரம், “பீட்சாவை கத்தி மற்றும் போர்க் கொண்டு சாப்பிடுபவர்களைப் போலத்தான் இதுவும், இதில் தப்பில்லை” என்று ஒரு தரப்பினரும், “சீன சாப்பிஸ்டிக்ஸ் மூலம் கொரோனா வைரஸ் பரவிவிடுமோ என்ற பயத்தில் அவர் கைகளால் சாப்பிடுகிறார்” என்று மற்றொரு தரப்பினரும் எனப் பல்வேறு கருத்துக்களை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.
