ஈரான் நாட்டின் இராணுவத் திறன்கள் போரினால் முற்றிலுமாகச் சிதைந்துவிட்டதாகவும், அந்த நாடு தற்போது மிகுந்த பலவீனமடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானிடம் இப்போது விமானப்படை, கடற்படை அல்லது பாதுகாப்பு உபகரணங்கள் என எதுவுமே இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஈரான் பேச்சுவார்த்தைக்காகக் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
எந்தவித நிதி உதவியையும் ஈரானுக்கு வழங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிய டிரம்ப், இது குறித்த தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த பிப்ரவரி மாதம் வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, அணுசக்தித் திட்டம் மற்றும் தடைகள் குறித்து அடுத்த 60 நாட்களுக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறக்க ஒப்புக்கொண்டுள்ளது, அதற்குப் பதிலாக அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெற உள்ளது. இப்பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மத்தியஸ்தராகச் செயல்பட்டுள்ளார்.
