பங்குச்சந்தையில் (Stock Market) ஏற்பட்ட கடுமையான நஷ்டம் மற்றும் கடனை அடைப்பதற்காக, வாலிபர் ஒருவர் தன்னைத்தானே கடத்திக் கொண்டு, தனது குடும்பத்தினரிடமே 50 லட்சம் ரூபாய் பிணைத்தொகை (Ransom) கேட்டு நாடகமாடிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான ஜிக்னேஷ் லால்ஜிபாய் தலாமியா என்ற நபர் திடீரென மாயமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி பதறியடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே, ஜிக்னேஷைக் கடத்தி வைத்துள்ளதாகக் கூறி, 50 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் அவரைக் கொன்று விடுவோம் என்றும் குடும்பத்தினருக்கு மிரட்டல் போன் வந்துள்ளது. ​இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியபோது, ஜிக்னேஷின் செல்ஃபோனில் இருந்து ஒரு விசித்திரமான வீடியோ சிக்கியது. அதில் ஜிக்னேஷ், தனது கைகளையும் இடுப்பையும் துணியால் தானே கட்டிக்கொண்டு, வாயில் துணியை திணித்து, ஜன்னல் கம்பியில் பிணைக்கப்பட்டிருப்பது போல் தனியாகப் போஸ் கொடுத்துள்ளார்.

மேலும், அவர் மயங்கி விழுந்தது போல் நடிக்க, அருகில் இருந்த இருவர் அதை வீடியோ எடுத்துள்ளனர். வீடியோவின் இறுதியில், ஜிக்னேஷ் மிகச் சாதாரணமாக வாயில் இருந்த துணியை எடுத்துவிட்டு, கயிறுகளை அவிழ்த்துவிட்டு கூலாகப் பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்து சந்தேகமடைந்த போலீஸார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கோத்ரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சொகுசாகத் தங்கியிருந்த ஜிக்னேஷை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், கடனை அடைக்கத் தானே இந்தக் கடத்தல் நாடகத்தை ஆடியதாக அவர் ஒப்புக்கொண்டது ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது.