கொரோனா காலத்திற்குப் பிறகு தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பல கார்ப்பரேட் நிறுவனங்களிலும் ‘வீட்டிலிருந்தே வேலை செய்யும்’ கலாச்சாரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், அந்த சுதந்திரத்தை ஒரு சில ஊழியர்கள் தவறாகப் பயன்படுத்தும்போது, அது ஒட்டுமொத்தக் குழுவிற்கும் எத்தகைய பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்குச் சான்றாக ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
முக்கியமான க்ளையண்ட் மீட்டிங்கின் போது, ஊழியர் ஒருவர் தவறுதலாகத் தனது கணினி திரையில் கேமிங் விளையாடிக் கொண்டிருந்த திரையைப் பகிர்ந்து மாட்டிய சம்பவம், சோஷியல் மீடியாவிலும் ரெடிட் தளத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அலுவலகத்தின் மிக முக்கியமான க்ளையண்ட் உடன் ஆன்லைன் மீட்டிங் நடந்து கொண்டிருந்த வேளையில், அந்த ஊழியர் மீட்டிங்கில் கவனம் செலுத்தாமல் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மீட்டிங்கின் போது ஏதோ ஒரு தகவலைக் காட்டுவதற்காகத் தனது திரையைப் பகிர முற்பட்டபோது, அவர் அவசரப்பட்டுத் தான் விளையாடிக் கொண்டிருந்த கேமிங் திரையைப் பகிர்ந்துவிட்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த க்ளையண்ட் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்களின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டு கடும் கோபமடைந்துள்ளனர். இந்த ஒரே ஒரு சம்பவத்தால், அந்த குறிப்பிட்ட ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டது மட்டுமன்றி, அந்தத் திட்டத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்தக் குழுவினரின் வீட்டிலிருந்தே வேலை செய்யும் சலுகையையும் நிறுவனம் உடனடியாக ரத்து செய்து, அனைவரும் தினமும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த பதிவு ரெடிட் தளத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையவாசிகளிடையே தீயாய் பரவியது. “ஒருவர் செய்த முட்டாள்தனமான தவறால், சிறப்பாகப் பணியாற்றி வந்த மற்ற ஊழியர்களும் தண்டனை அனுபவிப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று பலரும் தங்களது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதே சமயம், வீட்டிலிருந்தே வேலை செய்யும்போது ஊழியர்கள் காட்டும் இதுபோன்ற பொறுப்பற்ற தனமே நிறுவனங்களை WFH சலுகையைத் திரும்பப் பெற வைக்கிறது என்றும் சிலர் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த விசித்திரச் சம்பவம், கார்ப்பரேட் ஊழியர்கள் மத்தியில் ஒரு பெரிய எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
