சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரலை செய்வதாகக் கூறிவிட்டு, மேகதாது அணை விவகாரம் தொடர்பான தீர்மானத்திற்குப் பிறகு நேரலையை நிறுத்திய தமிழக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் முதலமைச்சர் திணறுவார் என்ற பயத்தினாலேயே இந்த நேரலை நிறுத்தப்பட்டதாக அவர் விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் நடப்பவற்றை இரும்புத்திரை போட்டு மறைத்தாலும், அவை மக்களிடம் வெளிப்பட்டுதான் தீரும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய ரகசியமான நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வெறும் பிம்பங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு அரசாங்கத்தை ஆக்கப்பூர்வமாக நடத்திவிட முடியாது என்று கூறியுள்ள எச். ராஜா, சட்டமன்றம் என்பது வசனங்களைப் பேசி ஒப்பிக்கும் சினிமா படப்பிடிப்புத் தளம் அல்ல என்று சாடியுள்ளார். அன்றாட நிகழ்வுகளையும், எதிர்கட்சிகளின் விமர்சனங்களையும் உற்று கவனித்துச் செயல்பட்டால் மட்டுமே ஒரு வலுவான ஆட்சியை வழங்க முடியும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இவற்றைத் தவிர்த்துவிட்டு வெறும் சமாளிப்புகளை மட்டும் மேற்கொண்டால், முந்தைய ஆட்சியைப் போலவே தற்போதைய முதலமைச்சரும் ஒரு ‘பொம்மை முதலமைச்சராகவே’ பார்க்கப்படுவார் என்று அவர் எச்சரித்துள்ளார்.