திரைப்படத்தின் ஒரு வசனத்தையோ அல்லது பெயரையோ நிஜ வாழ்க்கையில் மக்கள் எப்படி தீவிரமாகப் பின்பற்றுவார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறது நடிகர் சரத்குமாரின் சமீபத்திய அறிவிப்பு. தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவாளர்களைச் சந்திப்பதற்காக அவர் வெளியிட்டுள்ள ஒரு புதிய யோசனை தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் பிறந்தநாள் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்வில் பேசும்போது, தனது நீண்ட நாள் தொண்டர்களை அடையாளம் காணவும், அவர்களுக்குள் ஒரு பலமான பிணைப்பை ஏற்படுத்தவும் ஒரு வித்தியாசமான யோசனையை அவர் முன்வைத்துள்ளார்.

அப்போது பேசிய அவர், தன் நினைவுக்கு திடீரென உதித்த அந்த யோசனையைப் பகிர்ந்து கொண்டார். தனது திரையுலக வாழ்க்கையில் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த ‘நாட்டாமை’ திரைப்படத்தின் பெயரை மையமாக வைத்து, “நாட்டாமை குடும்பம்” என்று ஆதரவாளர்கள் தங்களது கைகளில் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இது வெறும் அடையாளமோடு நின்றுவிடவில்லை; தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு இது ஒரு ‘கிரீன் கார்டு’ போலச் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, கையில் “நாட்டாமை குடும்பம்” என்று பச்சைக் குத்தியிருப்பதை அடையாளமாகக் காட்டினால், எந்தவிதத் தடையுமின்றி அவரை எளிதாகவும் நேரடியாகவும் சந்திக்கலாமாம். ரசிகர்களையும் தொண்டர்களையும் ஒன்றிணைக்கவும், அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கவும் அவர் கையாண்டுள்ள இந்த வித்தியாசமான பிரசார உத்தி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.