ஈரான் அரசியல் களத்தில் தற்போது உச்சக்கட்ட பரபரப்பும் மர்மமும் நிலவி வருகிறது. அமெரிக்காவுடனான மோதல் போக்கு மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில், நாட்டின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி எங்கே இருக்கிறார் என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் வெளிவராமல் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஈரான் ஊடகங்கள் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம், நாட்டின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குறித்த 12 விநாடிகள் ஓடக்கூடிய மிகக் குறுகிய மற்றும் தேதி குறிப்பிடப்படாத ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், கமேனி தனது ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய கிழக்கு நாடுகளின் தற்போதைய வியூகங்கள் குறித்து விவாதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.”உச்ச தலைவர் கமேனியின் புதிய வீடியோவை முதல்முறையாகப் பாருங்கள்” என்று அந்தச் செய்தி நிறுவனம் தனது இணையதளத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
மொஜ்தபா கமேனியின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து சர்வதேச ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த பிப்ரவரி 28 அன்று முந்தைய உச்ச தலைவரும் இவரது தந்தையுமான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, மொஜ்தபா கமேனி பதவியேற்றார். இருப்பினும், அமெரிக்கா-ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, 56 வயதான புதிய உச்ச தலைவர் பொதுவெளியில் ஒருமுறை கூட தோன்றவில்லை.
🚨 Published for the first time
A video of religious science teaching by Ayatollah Mojtaba Khamenei pic.twitter.com/uFtIvZ0POy
— IRIB (Islamic Republic of Iran Broadcasting) (@iribnews_irib) March 19, 2026
ஏன், தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை.இஸ்ரேலிய ஊடகங்களோ, மொஜ்தபா கமேனி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும் என்றும் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தரப்பிலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவே கூறப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கமேனியுடன் தொடர்புகொள்வது தற்போது “மிகவும் கடினமாக உள்ளது” என்று ஒப்புக்கொண்டுள்ளார். ரகசியமான முறையில் டின்ட்டட் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட காரில் அழைத்துச் செல்லப்பட்ட தன்னை, கமேனிக்கு பதிலாக வேறு ஒரு நபர் சந்தித்துப் பேசியதாகவும், அந்தச் சந்திப்பே தனக்கு முழுமையான திருப்தியைத் தரவில்லை என்றும் வெளிவந்திருக்கும் தகவல்கள் ஈரானின் உட்சபட்ச அதிகார மையத்தில் நிலவும் குழப்பங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.மேலும் இந்த நிலையில் தற்போது முதல் முறையாக புதிய உச்ச தலைவர் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள விவகாரம் உலக அளவில் பேசும் பொருளாக மாறி உள்ளது
