அமைதியாக விவாதிக்க வேண்டிய உலக நாடுகளின் நாடாளுமன்றங்கள் அவ்வப்போது அரங்கேற்றும் அதிரடிச் சம்பவங்கள் அதிர வைக்கும். அந்த வகையில், கொசோவோ  நாட்டின் நாடாளுமன்றத்தில் அரங்கேறியுள்ள ஒரு  சம்பவம் தற்போது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஜூன் மாதத் தேர்தலுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தை முறைப்படி கட்டமைப்பதற்காகக் கூட்டத்தொடர் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் கூட்டத்தொடரின் நடுவேதான் இந்த எதிர்பாராத திருப்பம் அரங்கேறியுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தில் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றுள்ள அல்பின் குர்தி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, நாட்டின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும், இதுகுறித்து எதிர்க்கட்சிகளுடன் அரசு விரிவாகக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அவர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான சலசலப்பும் வாக்குவாதமும் வெடித்தது.

 

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அலையன்ஸ் கட்சியைச் சேர்ந்த பெண்  நாடாளுமன்ற உறுப்பினர் டைம் காத்ரிஜாஜ், தான் மறைத்து வைத்திருந்த முட்டைகளை சட்டென்று கையில் எடுத்தார். கண் இமைக்கும் நேரத்தில் இடைக்காலப் பிரதமர் அல்பின் குர்தியை நோக்கி அவற்றை வீசத் தொடங்கினார். முட்டைகளை வீசியதுடன் நிறுத்தாமல், அவரை நோக்கி “அவமானம், அவமானம்” என்று சபையில் உரத்த குரலில் ஆவேசமாகக் கத்தினார்.

சபையில் திடீரென நிகழ்ந்த இந்த எதிர்பாராத தாக்குதலால் அங்கே பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்ட சக எம்பி-க்களும், நாடாளுமன்றப் பாதுகாப்புப் பணியாளர்களும் உடனடியாக விரைந்து வந்து அந்தப் பெண் எம்பியை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த முட்டை வீச்சுச் சம்பவம் காரணமாக, நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஜனநாயகத்தின் கோவிலாகக் கருதப்படும் நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மீது முட்டை வீசப்பட்ட இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.