சினிமா உலகில் எவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படமாக இருந்தாலும், அது மக்களிடம் சென்றடைய வேண்டுமென்றால் விளம்பரம் எனப்படும் ‘ப்ரமோஷன்’ என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிக மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. சமூக வலைதளங்கள் கோலோச்சும் இந்தச் சூழலில், சில படங்கள் வெற்றியடைவதற்கும், சில படங்கள் மக்களிடம் சேராமல் போவதற்கும் இந்த விளம்பர உத்திகளே முக்கியக் காரணமாக அமைகின்றன.

சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும் சில நடிகர், நடிகைகள் இதுபோன்ற பிரமோஷன் நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வரிசையில் நடிகர்களில் தல அஜித்தைக் குறிப்பிடலாம் என்றால், நடிகைகளில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். ரஜினி, விஜய், அஜித் எனத் தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நடிகர்களுடனும் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ள நயன்தாரா, பொதுவாகத் தன் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலோ அல்லது நேர்காணல்களிலோ கலந்துகொள்வதே இல்லை.

ஆனால், தன் சொந்தக் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்கிய சில படங்களின் பிரமோஷன் பணிகளில் மட்டும் அவர் கலந்துகொண்டதுண்டு. அந்த வகையில், தற்போது அவர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா திடீரென கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பொதுவாக இதுபோன்ற விழாக்களில் தான் தலைகாட்டுவதில்லை என்பதற்கான காரணத்தையும் அவர் மேடையில் வெளிப்படையாகப் பேசினார். “நான் வழக்கமாக எந்தப் பட விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை; ஏனென்றால், அதுபோன்ற நிகழ்வுகளில் பேசுவதற்கோ அல்லது கலந்துகொள்வதற்கோ எனக்கு அவ்வளவாகத் திறமை இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் ஒதுங்கி இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த முறை ‘டாக்ஸிக்’ விழாவில் கலந்துகொண்டதற்குக் காரணம் நடிகர் யஷ் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து நயன்தாரா மேலும் கூறுகையில், “இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன, அதில் மிக முக்கியமானது நடிகர் யஷ். அவர் நேரில் அழைத்து என்னை வரச் சொன்னார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அவருடைய ஒரே ஒரு போன் கால் மட்டுமே எனக்குப் போதுமானதாக இருந்தது. மேலும், இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருடைய கூட்டு முயற்சியும் அதன் தெளிவான பார்வையும்  எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில், கன்னடத் திரையுலகின் முன்னணி நாயகன் யஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நயன்தாராவுடன் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்றுத் திரையுலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.