சேலம் மாவட்டத்தில் நீட் மறுதேர்வு குறித்த கடுமையான மன அழுத்தம் மற்றும் தேர்வு பயம் காரணமாக 19 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த சலூன் கடை தொழிலாளி சேகர் மற்றும் தினக்கூலித் தொழிலாளி புவனேஸ்வரி ஆகியோரின் மகளான எஸ். கோபிகா, அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்விற்குத் தயாராகி வந்துள்ளார்.
ஏற்கனவே மூன்று முறை நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில், வரவிருக்கும் மறுதேர்விற்காகக் கடுமையான அழுத்தத்துடன் படித்து வந்த சிறுமி, திடீரென தவறான முடிவு எடுத்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டது ஒட்டுமொத்தப் பெற்றோர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகக் கடுமையான கண்டனத்தையும், அதிர்ச்சியையும் பதிவு செய்துள்ளார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், பயிற்சி மையக் கொள்ளை என மாபெரும் உயிர்க்கொல்லும் ஸ்கேமாக மாறியிருக்கிறது; இந்த மோசடியான தேர்வை ஒன்றிய அரசு உடனே ஒழித்தே ஆக வேண்டும்” என்று ஆக்ரோஷமாகச் சாடியுள்ளார். மேலும், “கழகத் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசு நீட் ஒழிப்பிற்காக எடுத்த சட்டப் போராட்டத்தைத் தற்போதைய த.வெ.க அரசு சமரசமின்றித் தொடர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டதோடு, நீட் தேர்விற்குத் தயாராகும் மாணவச் செல்வங்கள் யாரும் இத்தகைய தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
