தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கூட்டணி என்ற செய்திகள் பரவியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த சமீபத்திய நேர்காணல் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு வழங்கிய அந்த நேர்காணலில், “தேர்தல் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது” என்றும், “தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று மறுக்க முடியாது” என்றும் கூறினார்.

இதனைக் தொடர்ந்து, கட்சித் தலைமையிலான தவெக  நிர்வாகிகள் கூட்டணி விவகாரம் குறித்து ஊடகங்களில் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கக்கூடாது என நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே தவெக செயற்குழு கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயே முதல்வர் வேட்பாளர் என முடிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், தவெக  தனித்த கொள்கையுடன் இயங்கும் கட்சி என்பதால், பாஜகவோ திமுகவோ உடன் கூட்டணி இல்லை என்ற தீர்மானமும் முன்பே தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தற்போதைய அரசியல் வாதங்கள் பற்றி கட்சி சார்பாக ஒவ்வொருவரும் நேரில் பதிலளிக்க தொடங்கினால் கட்சி நோக்கங்களில் குழப்பம் ஏற்படலாம் என்ற எண்ணத்தில், விஜய் தனது நிர்வாகிகள் அனைவருக்கும் “கூட்டணி விவகாரத்தில் எந்தவிதமான பேச்சும் கடுமையாக தவிர்க்கப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தியதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த அறிவுறுத்தல், 2026 தேர்தலை முன்னிட்டு தவெக  தனது பாதையை தெளிவாகவே அமைத்திருக்கிறது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.