2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கேட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கு குறித்து நீதிபதி வேல்முருகன் விசாரணை நடத்தி தீர்ப்பளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வீரமணி, தனது சொத்து விவரங்களை முறையாக குறிப்பிடவில்லை எனவேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமூர் என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யும் வகையில், வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தேர்தல் முடிவடைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு தாக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது அந்த தேர்தல் அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளாக மாறியுள்ளனர் என்பதால் வழக்கு செல்லாது என அவர் தரப்பில் வாதம்செய்யப்பட்டது.
இருப்பினும், தேர்தல் ஆணைய தரப்பில் வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், 2021ஆம் ஆண்டு வேலூரைச் சேர்ந்த ராமூர் அளித்த புகாரின் அடிப்படையில் வருமானத்துறை விசாரணை நடந்து, சொத்து விவரங்களை மறைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும், தேர்தல் முடிந்தாலும் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டால், பதவியிலிருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இயலும் என வலியுறுத்தினார். இருதரப்பு வாதங்களையும் கவனித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மனு தகுதியற்றது எனத் தீர்மானித்து, அதனை தள்ளுபடி செய்தார்.
