இமயமலையின் உறைபனியில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரு துறவி ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சுமார் மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் குளிரில், தலை தவிர உடல் முழுவதும் பனிக்குள் புதைந்த நிலையில் அந்தத் துறவி அசையாமல் அமர்ந்திருக்கும் காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

“இது சனாதன தர்மத்தின் சக்தி” எனப் பலரும் இந்த வீடியோவை ஆன்மீக நோக்கில் பகிர்ந்து வர, ஒரு சாதாரண மனிதனால் இவ்வளவு குளிரைத் தாங்க முடியுமா என்ற விவாதமும் இணையத்தில் அனல் பறக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்ட இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்தபோது, இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது.

வீடியோவில் உள்ள அமைதி மற்றும் துல்லியம் பலருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், இது ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட “AI Generated” வீடியோ எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

“தியானத்தால் எதுவும் சாத்தியம் தான், ஆனால் இதுபோன்ற போலி வீடியோக்களைப் பரப்பி மக்களை ஏமாற்ற வேண்டாம்” எனப் பல நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.