அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில ஆளுநர் கவின் நியூசம், மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதா 268-இல் கையெழுத்திட்டு, தீபாவளியை அதிகாரப்பூர்வ மாநில அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை நாளாக அறிவித்துள்ளார். புதிய சட்டத்தின் படி, தீபாவளி நாளில் மாநிலத்தின் அரசுப் பள்ளிகள் மற்றும் சமூகக் கல்லூரிகள் மூட அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் அரசு ஊழியர்கள், பொதுப் பள்ளி மற்றும் கல்லூரி பணியாளர்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தீபாவளியின் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் கல்வி நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை நடத்த ஊக்குவிக்கப்படுகிறது. இந்திய-அமெரிக்க சமூகம் இந்த முடிவை வரவேற்று, ஆளுநர் நியூசத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது.
AANHPI கமிஷனுக்கான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகரும், சிலிக்கான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் கொடையாளருமான அஜய் பூடோரியா, சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றில் கூறியதாவது: “தீபாவளியை கலிபோர்னியா மாநில விடுமுறையாக அறிவித்ததற்காக ஆளுநர் கவின் நியூசத்துக்கு நன்றி. இந்த மசோதாவை முன்னெடுத்து நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஷ் கல்ரா மற்றும் தர்ஷனா படேல் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி” என்றார். மேலும் இந்த வரலாற்று முடிவு, இந்திய வம்சாவளியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
