தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து ஒருமையில் தரக்குறைவாக விமர்சித்து வருவதாகக் கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு விவகாரம் மற்றும் விஜய்யின் சினிமா பயணம் குறித்து சீமான் மேடைகளில் கிண்டலாகவும், கண்ணியமற்ற முறையிலும் பேசியுள்ளதாக வழக்கறிஞர் அதிசயா குற்றம் சாட்டியுள்ளார். அரசியலையும் சினிமாவையும் குழப்பிக்கொள்ளாமல், முதல்வர் என்ற உயர்ந்த பதவியில் இருப்பவரை ஒருமையில் விமர்சிப்பது அரசியல் நாகரிகமற்ற செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், முதல்வர் விஜய் பதவியேற்ற பிறகு மதுக்கடைகளை மூடியது, இலவச மின்சாரம், விவசாயிகளுக்கான பயிர்க்கடன், சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சீரமைப்புப் பணிகள் எனப் பல நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகள் அரசியலில் இருக்கும் சீமான், இத்தகைய அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும், அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
