மனிதன் எவ்வளவுதான் தொழில்நுட்பத்தில் வளர்ந்திருந்தாலும், கடலின் ஆழமான பகுதிகளை இன்னும் முழுமையாக ஆராய முடியவில்லை என்பதற்கு சான்றாக, பசிபிக் பெருங்கடலின் கலாபகோஸ் தீவுகளுக்கு அருகில் வாழும் ‘ரெட்-லிப்ட் பேட்ஃபிஷ்’ (அறிவியல் பெயர்: Ogcocephalus darwini) என்ற விசித்திர மீன் உலக அளவில் விஞ்ஞானிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த மீனின் தலைப்பகுதி அகன்று தட்டையாக, பார்ப்பதற்கு வௌவால் (Bat) போன்ற வடிவத்தில் இருப்பதால் இதற்கு ‘பேட்ஃபிஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் மிக முக்கிய அம்சமே, இதன் உதடுகள் பிரகாசமான சிவப்பு நிறத்தில், யாரோ லிப்ஸ்டிக் பூசியது போல காட்சியளிப்பதுதான். கடலின் 20 முதல் 100 மீட்டர் ஆழத்தில், சூரிய ஒளி புகாத இருண்ட பகுதியில் வாழும் இந்த மீன்கள், தங்களது துணையை ஈர்ப்பதற்காகவும், தங்களுக்குள் தொடர்பு கொள்வதற்காகவும் இந்த பிரகாசமான சிவப்பு நிற உதடுகளைக் கொண்டுள்ளன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மீனின் மற்றொரு வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், இது சாதாரண மீன்களைப் போல தண்ணீரில் நீந்துவது கிடையாது; மாறாக கடலின் தரைப்பகுதியில் கால்களால் நடப்பது போல நடந்து செல்லும். இதற்கேற்ப இதன் துடுப்புகள் (Fins) வலுவான கால்கள் போல பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. இதன் மூலம் கடலடியில் மெதுவாக நடந்து சென்று, தனது ஆற்றலை (Energy) சேமித்துக் கொள்கிறது.
மேலும், வேட்டையாடுவதற்காக இயற்கையிலேயே இதன் தலையில் ‘இலிசியம்’ (Illicium) என்ற சிறப்பு உறுப்பு உள்ளது. இது ஒரு தூண்டில் போல செயல்பட்டு, சிறிய மீன்களையும் கடல் உயிரினங்களையும் தன்பால் ஈர்த்து, நொடிப்பொழுதில் வேட்டையாட உதவுகிறது. சுமார் 35 முதல் 40 சென்டிமீட்டர் நீளம் வளரக்கூடிய இந்த மீன், ஆபத்து காலங்களில் மட்டும் தனது கால்கள் போன்ற துடுப்புகள் மூலம் அதிவேகமாகத் தப்பித்துச் செல்லும் தனித்துவமான குணம் கொண்டது என்று கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
