காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலை, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front) மேற்கொண்டது என விசாரணையில் தெரியவந்தது.

இதற்கு பதிலடியாக, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் மே 7-ஆம் தேதி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பல பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, “பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது” என இந்திய ராணுவ தளபதி எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் சார்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணைத்தலைவர் சைபுல்லா, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மிரட்டல் விடுத்துள்ளார். அவர்
“ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மே 10 அன்று நாம் செய்ததைப் போல, பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும். இதற்காக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரிடம் கோரிக்கை விடுப்போம்” என கூறினார்.

அவர் இந்தியா திடீரென நீரை திறந்து விட்டு நீர் தீவிரவாதத்தில் ஈடுபடுவதாகவும் பகல் காம் போன்று இன்னொரு தாக்குதல் நடத்தி பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் பொதுவெளியில் பகிரங்கமாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக இந்திய உளவுத்துறை  விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.