இன்றைய காலகட்டத்தில் இந்திய ஆண்களுக்கு இளம் வயதிலேயே தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஆனால், மேலைநாட்டு ஆண்கள் வயதானாலும் மிகவும் கட்டுக்கோப்பாகவும், தசை வலிமையுடனும் காட்சியளிக்கின்றனர். இதற்குப் பின்னால் எந்த மரபணு அதிசயமும் இல்லை, நம்முடைய அன்றாடத் தவறான உணவுப் பழக்கவழக்கங்களும், வாழ்வியல் முறைகளுமே காரணம் என்று ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியர்களின் உணவில் கார்போஹைட்ரேட் (சாதம், சப்பாத்தி) அதிகமாகவும், புரோட்டீன் (புரதச்சத்து) மிகக் குறைவாகவும் உள்ளது. மேலும், நாள் முழுவதும் சர்க்கரை கலந்த டீ, பிஸ்கட் மற்றும் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவது உடலில் கூடுதல் கலோரிகளைச் சேர்க்கிறது. இதற்கு நேர்மாறாக, மேலைநாட்டு ஆண்கள் அதிக புரோட்டீன் கொண்ட சமச்சீர் உணவை உண்பதோடு, பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் சர்க்கரையையும் மிகவும் குறைவாகவே பயன்படுத்துகின்றனர்.

இந்தியர்களின் வேலைக் கலாச்சாரத்தில் உடல் உழைப்பு குறைந்து, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் சூழல் அதிகரித்துள்ளது. எல்லாவற்றையும் விடப் பெரிய தவறு, இரவு 10 அல்லது 11 மணிக்கு அதிகப்படியான உணவைச் சாப்பிட்டுவிட்டு உடனடியாக உறங்கச் செல்வதுதான். இதனால் கலோரிகள் எரிக்கப்படாமல் வயிற்றுப் பகுதியில் கொழுப்பாகப் படிந்து விடுகிறது. ஆனால், மேலைநாட்டினர் மாலை 7 முதல் 8 மணிக்குள் தங்களது லேசான இரவு உணவை முடித்து விடுகின்றனர்.

மேலும், போதிய தூக்கமின்மை, மன அழுத்தம், உணவில் நார்ச்சத்தும் தண்ணீரும் குறைவாக இருப்பது போன்றவையும் இந்திய ஆண்களின் தொப்பைக்கு முக்கியக் காரணங்களாகும். இதிலிருந்து விடுபட, கடுமையான டயட் இருப்பதற்குப் பதிலாக வாழ்வியலை மாற்ற வேண்டும். முட்டை, பன்னீர், பருப்பு போன்ற புரோட்டீன் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுதல், தினமும் 8,000 முதல் 10,000 அடிகள் நடப்பது, இரவு உணவை 8 மணிக்குள் முடிப்பது மற்றும் 7-8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் ஆகியவை தொப்பையைக் குறைத்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.