விலங்குகளின் மீது மனிதர்கள் சவாரி செய்வதை நாம் பார்த்திருப்போம், ஆனால் பறவை ஒன்றின் மீது மனிதன் சவாரி செய்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? உலகிலேயே மிகப்பெரிய மற்றும் அதிக எடையுள்ள பறவையான நெருப்புக்கோழியின் (Ostrich) மீது மனிதன் ஒருவர் எவ்வித பயமும் இன்றி சவாரி செய்யும் வினோதமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக ஆப்பிரிக்கக் காடுகளில் காணப்படும் இந்த விசுவரூப பறவைகள் 9 அடி உயரமும், 100 கிலோவிற்கும் அதிகமான எடையும் கொண்டவை. அதிக எடை காரணமாக இவற்றால் பறக்க முடியாது என்றாலும், ஆபத்து காலங்களில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய திறன் படைத்தவை. இவற்றின் கால்கள் மிகவும் வலுவானவை என்பதால், மனிதனின் எடையை இவற்றால் மிக எளிதாகத் தாங்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தச் சவாரி அமைந்துள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்த வீடியோவில், தரையில் அமர்ந்திருக்கும் ஒரு பெரிய நெருப்புக்கோழியின் முதுகில் அமர்வதற்கு வசதியாக மென்மையான மெத்தை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது ஒரு நபர் லாவகமாக ஏறி அமர்ந்தவுடன், நெருப்புக்கோழியின் கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்படுகிறது. கண் பார்வை தெரிந்தவுடன் அந்தப் பிரம்மாண்ட பறவை மெதுவாக எழுந்து ஓடத் தொடங்குகிறது.

கையில் ஒரு சிறிய குச்சியுடனும், வாயில் விசிலுடனும் இருக்கும் அந்த நபர், சிக்னல் கொடுத்து நெருப்புக்கோழியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து திசைமாற்றி ஓட்டுகிறார். எக்ஸ் (X) தளத்தில் வெளியான இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து வியந்துள்ளனர். “இதைப் பார்த்தால் ஒலிம்பிக் போட்டிக்கு நெருப்புக்கோழியைத் தயார் செய்வது போல இருக்கிறது” என்றும், “இதன் கால்கள் எவ்வளவு வலிமையாக இருக்கின்றன!” என்றும் நெட்டிசன்கள் தங்களது வியப்பை கமெண்ட்டுகளாகப் பகிர்ந்து வருகின்றனர்.