உலகம் முழுவதும் வீட்டு வாடகையும், விலைவாசியும் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், நடுத்தர மக்கள் பலரும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த பேட்ரிக் போடிசெல்லி என்ற இளைஞர், இதற்குப் பயந்து தனது சிறிய காரையே நகரும் அதிநவீன ஆடம்பர வீடாக (Car Home) மாற்றி உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட, அது தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
https://www.instagram.com/reel/DZX_TXfNX08/?utm_source=ig_embed&ig_rid=ce2cbf01-8265-4f8b-8454-e6dbbabb7784&ig_mid=08B369DE-B994-4C13-BD0E-91341DCAA10D
அந்த வீடியோவில், காரின் பின்பக்கக் கதவைத் திறந்ததும் ஒரு சொகுசு பங்களாவிற்குள் நுழைவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. உள்ளே நுழைந்ததும் முதலில் கை கழுவும் பேசின் மற்றும் குளிப்பதற்கான ஷவர் வசதியுடன் கூடிய கழிவறை உள்ளது. அதற்கு நேர் எதிரே வீட்டு உபயோகப் பொருட்களை வைப்பதற்கான அலமாரிகளும், இரண்டு பேர் தாராளமாகப் படுத்து உறங்கும் அளவிற்கான பெரிய படுக்கை வசதியும் செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நகரும் காரின் சிறப்பம்சங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. பகல் நேரங்களில் அந்தப் படுக்கையை மடித்து இரண்டு பேர் அமரக்கூடிய சோபாவாகவும், நாற்காலியாகவும் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. படுக்கைக்கு மேலே சொகுசாகப் படுத்துக்கொண்டே பார்ப்பதற்கேற்ப மடிக்கக்கூடிய எல்.இ.டி டிவி மற்றும் கோடைகாலத்தைக் சமாளிக்க ஏசி (AC) வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், சமையல் செய்வதற்காக இண்டக்ஷன் அடுப்புடன் கூடிய சிறிய கிச்சன் மேடையும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “எனக்கும் இது போன்ற கார் வேண்டும்” என ஆவலுடன் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த காரை வீடாக மாற்ற பேட்ரிக் குறிப்பிட்ட இந்திய மதிப்பின்படியான செலவுதான் அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது. இந்த சொகுசு காரின் மொத்த மதிப்பு ₹83 லட்சத்திற்கும் அதிகம் என்று அவர் கூறியுள்ளார். இதைக் கேட்ட நெட்டிசன்கள், “இந்தக் காசு இருந்தால் இந்தியாவில் சொகுசான 2BHK வீடே வாங்கிவிடலாமே!” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
