கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்கக் கூடாது என்றும், மாணவர்கள் கையில் எந்தக் கயிறும் கட்டக் கூடாது என்றும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்துக்களின் மத நம்பிக்கைகளில் அரசு தலையிடுவது அடிப்படை நாகரிகமற்ற செயல் என்றும், தவெக அரசு மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மாணவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், இந்து மாணவர்களின் மத அடையாளங்களை அழிப்பதில் மட்டும் தவெக அரசு ஆர்வம் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

கல்வி அமைச்சர் மூலம் திமுகவின் ‘பி’ டீம் என்பதைத் தவெக நிரூபித்துவிட்டதாகக் கூறியுள்ள வானதி சீனிவாசன், ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக இந்துக்களின் மத அடையாளங்களை அழிக்க முற்பட்டால், விஜய் தனது அதிகாரத்தை மிக விரைவில் இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.