சிவகங்கை அருகே ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களின் பாதுகாப்புக் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பெண்களுக்கு விடிவு இல்லை என்பதைப் பெண்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என்றும், இந்தச் சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றன என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், முதல்வர் விஜய் தொடங்கி வைத்த ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ ஏதோ பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், இத்தகைய சம்பவங்கள் தொடர்வது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

காவல்துறை எப்போதும் போலத்தான் செயல்படுகிறது என்றால், எதற்காகச் சிறப்புப்படை என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். தமிழகப் பெண்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் இத்தகைய குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தவெக அரசு ‘தோல்வி கழக அரசாக’ மாறிவிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.