எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலகட்டங்களில் அதிமுகவில் சாதாரண தொண்டர்களும் பல்வேறு உயர் பதவிகளை அடைய முடிந்தது என்று குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் பச்சைமால், தற்போதைய அதிமுகவில் பணம் படைத்தவர்களுக்கு மட்டும்தான் பதவி வழங்கப்படுகிறது என்று அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, ஜெயலலிதாவால் தீயசக்தி என்று அழைக்கப்பட்ட திமுகவுடன் ரகசியக் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டார்கள் என்றும், இது தன்னை போன்ற ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தொண்டர்களின் மனதை உலுக்கியதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் அவர்கள் தற்பொழுது மக்கள் நலத்திட்டங்களைத் திறம்படச் செய்து வருவதாகப் பாராட்டிய பச்சைமால், அவருடைய கரத்தை வலுப்படுத்தவே நாங்கள் இன்று த.வெ.க.வில் இணைந்துள்ளோம் என்று பெருமிதத்துடன் கூறினார். அதிமுகவில் அரங்கேறும் பண நாயகத்திற்கு எதிராகவும், திமுகவுடன் கூட்டணி வைக்கத் துடிக்கும் தற்போதைய தலைமைக்கு எதிராகவும், உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் தவெகவை நோக்கி வரத் தொடங்கிவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் பச்சைமால் பேசியிருப்பது தற்பொழுது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
