இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் அள்ள வேண்டும் என்ற போதையில் இளைஞர்கள் பலரும் விபரீதமான காரியங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த இருவர் தமிழ்நாட்டு போலீசாரிடம் வசமாகச் சிக்கியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஜிஸ்மோன் மற்றும் ஜித்து சாஜி ஆகிய இருவரும், அதிக ஃபாலோயர்களைப் பெறுவதற்காகப் பெண் வேடமிட்டுப் பொது இடங்களில் நடனமாடி வீடியோ எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஏற்கனவே கேரளாவின் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் இவர்களது அலப்பறை தாங்க முடியாமல் அங்கிருக்கும் போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். அங்கிருந்து வண்டியைப் பிடித்த இந்த ‘மன்மத ராசாக்கள்’, தமிழ்நாட்டிலும் தங்களது வித்தையைக் காட்டலாம் என முடிவெடுத்துச் சென்னை மற்றும் கோவைக்கு வந்துள்ளனர்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த நேரத்தில், ஜிஸ்மோன் சேலை கட்டி பெண் வேடமிட்டு ஆட்டம் போட, அவரது நண்பர் அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, விடாமல் துரத்திய கோவை காட்டூர் போலீசார், இருவரையும் நேரில் வரவழைத்துத் தங்களது பாணியில் கவனித்துள்ளனர்.

போலீசாரின் பிடியில் சிக்கிய அந்த இளைஞர்கள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததுடன், அந்த வீடியோவையும் டெலீட் செய்துள்ளனர். “ரீல்ஸ் எடுக்க ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்தா இப்படித்தான் ஆகும்” என நெட்டிசன்கள் இவர்களைக் கிண்டலடித்து வருகின்றனர்.