தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், அங்கு பயிலும் மாணவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தி, பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் சாமுவேல் (45) என்பவர், கடந்த சில மாதங்களாகப் பள்ளி மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகக் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவிக்க, இச்சம்பவம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கலெக்டரின் உத்தரவின் பேரில், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவினர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாகச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆசிரியர் மாணவர்களுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்ததும், அவர்களை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆசிரியர் சாமுவேலைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இச்சம்பவம் குறித்துக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கலெக்டரின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
