திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அண்மைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், சட்டமன்றத்தில் ‘அப்பாவை காணோம்’ என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசியுள்ளதைச் சுட்டிக்காட்டி, “யாரையும் யாரும் அவ்வளவு எளிதாகக் காணாமல் ஆக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் சூழலில் கொள்கைப் பிடிப்புள்ள நபர்களே மிகவும் தேவை என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் பேசினார். மேலும், காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடி பொய்த்துப் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளதால், குறைந்தபட்சம் ஒருபோக சாகுபடியாவது நடப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை அரசு போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாறியதாக எழுந்துள்ள அரசியல் விவாதங்கள் குறித்து முத்தரசன் ஒரு சுவாரசியமான குட்டிக்கதையைக் கூறி விளக்கமளித்தார். அவர் பேசுகையில், “ஆற்றுப் படுகைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்று நினைத்து ஒரு ஆடு அந்தப் பக்கம் போகும். அதைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக மற்ற ஆடுகளும் அங்கே போகும்.

ஆனால், அங்கே போன பிறகுதான் ‘இதற்கு அதுவே மேல்’ என்ற உண்மை புரியும். மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பிப் போனால், அந்த ஆற்றுப்படுகை தங்களை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியாது. எனவே, வந்துவிட்டோம் கொஞ்ச நாள் இருப்போம் என்று நினைப்பார்கள். இதுதான் இன்றைய அரசியல் சூழல். இதை நான் பொதுவாகச் சொல்கிறேன்” என்று மிக நாசூக்காகவும், மறைமுகமாகவும் தனது அரசியல் நிலைப்பாட்டை முத்தரசன் விவரித்தார்.