கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கி எடுத்துள்ளது. வயதான முதியவர் ஒருவர் தனது வீட்டிலேயே கை-கால்கள் கட்டப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

கடந்த சனிக்கிழமை அன்று, ஆலப்புழாவைச் சேர்ந்த 67 வயதான சிவன்குட்டி என்ற முதியவர் தனது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கை மற்றும் கால்கள் பலமாகக் கட்டப்பட்டிருந்ததோடு, கழுத்து துணியால் நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தார். அவர் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் மோதிரம் போன்ற நகைகளும் மாயமாகியிருந்ததால், இது வழக்கமான கொள்ளை மற்றும் கொலை வழக்காகவே முதற்கட்டத்தில் பார்க்கப்பட்டது.

ஆனால், போலீசார் வழக்கை ஆழமாகத் துப்பறியத் தொடங்கியபோதுதான் உண்மை முகமூடியைக் கழட்டியது. சிவன்குட்டியின் சொந்த உறவினரான 13 வயது சிறுமி மீது போலீசாருக்குச் சிறிய சந்தேகம் எழுந்தது. அந்தச் சிறுமியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் மூலமாகப் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாயின.

அந்தச் சிறுமிக்கு 17 வயதுடைய காதலன் ஒருவன் இருந்துள்ளான். அவனுக்கு ஐபோன் வாங்குவதற்கும், சொந்தமாக பைக் வாங்குவதற்கும் கடுமையான பணத்தேவை ஏற்பட்டுள்ளது. பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்த அந்த இளம் காதலனும் அவனது நண்பர்கள் இருவர் மற்றும் இந்தச் சிறுமியும் சேர்ந்து ஒரு கொடூரத் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.

திட்டத்தின்படி, சிறுமியின் காதலனும் அவனது நண்பர்கள் இருவருமாகச் சேர்ந்து சிவன்குட்டியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால், குற்றச் செயல் நடக்கும்போது அந்தச் சிறுமி நேரில் செல்லவில்லை; மாறாக, கைப்பேசியில் Video Call மூலம் இணைந்திருந்து, வீட்டிற்குள் நடப்பவற்றைக் கண்காணித்து ஒட்டுமொத்தச் செயலையும் ஒருங்கிணைத்துள்ளார். முதியவர் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்ததோடு, பணத்திற்காக அவரையும் தீர்த்துக்கட்டியுள்ளனர்.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 17 வயது சிறுமியின் காதலன், அவனது நண்பர்கள் இரண்டு பேர் மற்றும் உடந்தையாக இருந்த 13 வயது சிறுமி என நால்வரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு ஐபோனுக்காகவும் பைக்கிற்காகவும் உறவு முறையான முதியவரை இளம் வயதிலேயே சிறுவர்களும் சிறுமியும் திட்டமிட்டுக் கொலை செய்த இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.