திருத்தணியை அடுத்த மணவூர் ரயில் நிலையத்தில் நடந்த கோரச் சம்பவம் ஒன்று அனைவரையும் உலுக்கி எடுத்துள்ளது. ரயில் பாதையில் மூதாட்டி ஒருவர் உடல் சிதைந்த நிலையில் சடலமாகக் கிடந்ததோடு, அருகில் ஒரு வீல்சேரும் சுக்குநூறாக உடைந்து கிடந்தது. இந்தச் சம்பவம் சாதாரண விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியபோது வெளிவந்த உண்மைகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மணவூரைச் சேர்ந்த சேஷாத்திரி – பத்மாவதி தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதுமை காரணமாக 72 வயதான பத்மாவதியால் சரியாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையானார். தாயைப் பராமரிப்பதில் மகன்களுக்கு இடையே தயக்கம் ஏற்பட்ட நிலையில், இளைய மகனான பார்த்தசாரதி (43) அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இருப்பினும், இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கோபித்துச் சென்று விட்டார்.
கடந்த மூன்று மாதங்களாக மனைவியைப் பிரிந்த சோகத்திலும், படுத்த படுக்கையாக இருந்த தாயை உரிய முறையில் பராமரிக்க முடியாமலும் பார்த்தசாரதி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தாயை தனக்கு ஒரு பெரும் பாரமாகக் கருதிய அவர், அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
திட்டத்தின்படி, நேற்று இரவில் தாயை வீல்சேரில் அமர வைத்து ரயில் நிலைய பிளாட்பாரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பல மாதங்களுக்குப் பிறகு வெளியே செல்வதால் அந்தத் தாய் மகிழ்ச்சியடைந்திருந்தாலும், தன் மகனே தன்னைத் கொல்லப் போகிறான் என்பதை அவர் அறியவில்லை. அப்போது வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தின் முன்பு, தாயையும் வீல்சேரையும் சேர்த்துப் பார்த்தசாரதியே தள்ளிவிட்டுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் தாய் பத்மாவதி உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் அங்கு வந்த போலீசார், ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், பார்த்தசாரதியே வீல்சேருடன் தாயைத் தள்ளிவிட்டது உறுதியானது. இதனைக் கொண்டு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, சுமையாக இருந்த தாயைக் கொன்றதாக அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கலாமே என்று ஆதங்கப்பட்ட போலீசார், பார்த்தசாரதியை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயையே மகனே தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
