தாய்ப்பாலின் நிறம் எப்போதுமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. காலம், தாய் உட்கொள்ளும் உணவு மற்றும் உடல் நிலை மாற்றங்களுக்கு ஏற்ப தாய்ப்பாலின் நிறத்தில் மாறுதல்கள் ஏற்படுவதுண்டு. இந்த நிற மாற்றங்கள் இயல்பானவைதானா மற்றும் எப்போது மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்பது குறித்து பிரபல குழந்தை நல தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. பிரியதர்ஷினி அவர்கள் விரிவான விளக்கமளித்துள்ளார்.

குழந்தை பிறந்த முதல் சில நாட்களில் சுரக்கும் பால் ‘கொலஸ்ட்ரம்’ எனப்படும். இதில் நோய் எதிர்ப்பு சக்தியும் சத்துக்களும் செறிந்து காணப்படுவதால், அதில் உள்ள கரோட்டினாய்டுகள் காரணமாக அது பெரும்பாலும் மஞ்சள் அல்லது தங்க-மஞ்சள் நிறத்தில் வெளிப்படும். நாட்கள் செல்லச் செல்ல முதிர்ந்த தாய்ப்பாலாக மாறும் போது, பாலூட்டத் தொடங்கும் ஆரம்பத்தில் பால் மெல்லியதாகவும் தண்ணீர் போன்றும் ஊட்டுதலின் முடிவில் அடர்த்தியான கிரீம் போலவும் மாறுவது முற்றிலும் இயற்கையானது.

தாய்மார்கள் உட்கொள்ளும் உணவுகளைப் பொறுத்து பாலின் நிறம் தற்காலிகமாக மாறக்கூடும். உதாரணமாக, கீரை வகைகள் பச்சை நிறத்தையும், பீட்ரூட் போன்ற காய்கறிகள் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் இளஞ்சிவப்பு நிறத்தையும் ஏற்படுத்தலாம்.முலைக்காம்புகளில் ஏற்படும் சிறிய காயங்கள் அல்லது விரிசல்கள் காரணமாக பாலுடன் லேசான ரத்தம் கலந்து இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறம் தோன்றலாம். இது உடனடியாக அச்சப்பட வேண்டிய விஷயம் அல்ல என்றாலும், கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

உணவு முறையால் ஏற்படும் நிற மாற்றங்களுக்குப் பாலூட்டுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், தொடர்ச்சியாகச் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பால் வருவதுடன், மார்பகத்தில் கடுமையான வலி, சிவப்புத் தடிப்புகள், அதிக வெப்பம், காய்ச்சல் மற்றும் குளிர் நடுக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது தொற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, எத்தகைய சுயமருத்துவமும் செய்யாமல் உடனடியாக மகப்பேறு அல்லது குழந்தை நல மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சை பெறுவது அவசியமாகும்.